Monday, December 17, 2007

வலைச்சரம் இடுகை 1 ( 2007 12 17)

வலைச்சரம் இடுகை 1 ( 2007 12 17)

மங்கலம் பொங்கும் மார்கழி முதல் திருநாளில் வலைச்சரம் வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு என் வணக்கம்.

இணையத்தமிழை எனக்கு முதலில் அறிமுகப்படுத்தியவர் அலுவலகத் தோழர் J கல்யாண் ( தேன்கூடு திரட்டியை அவர் பல மாதங்களுக்குப் பிறகுதான் தொடங்கினார்) முதலில் அவரை நன்றியுடன் நினைவுகூர்ந்து இந்த வார வலைச்சரம் தொடுக்கத் தொடங்குகிறேன்.

தேன்கூடு கல்யாண் இடுகைகள்
இந்த இடுகையை இன்னும் மேம்படுத்த எண்ணியிருக்கிறேன்.

அலுவலகத்தில் கல்யாண் என்ற பெயரில் இன்னொருவரும் இருந்ததால் நாங்கள் அவரை ஜாவா கல்யாண் என்றுதான் அழைப்போம் தமிழில் அதிகம் ஆர்வம் உடையவர் என்று பேச்சுவாக்கில் தெரிந்துகொண்ட பிறகு எங்கள் நட்பு இன்னும் அதிகமாகியது. பிறகு “தினம் ஒரு கவிதை” தொடர் மடல்கள், உயிரெழுத்து, மரத்தடி, ராகாகி குழும மடல்கள் முகமறியா பல இனிய உலகளாவிய இணைய நட்புகளை ஏற்படுத்தின. வலைப்பதிவுகள் வந்தபிறகு பின்னூட்டங்கள் அளித்து ஊக்குவிப்பது வழக்கமாயிற்று. அதற்காகவே பிளாக்கர் மற்றும் வேர்ட்ப்ரஸ் தளங்களில் இணைந்தேன்.

சில மாதங்களுக்கு முன் பொன்ஸ் ~ பூர்ணா அவர்கள் வலைச்சரம் தொடுக்க இயலுமா என்று வேண்டுகோள் விடுத்தார். நான் இடுகைகள் எதுவும் எழுதுவதில்லையே. பின்னூட்டம் மட்டுமே அளித்துக்கொண்டிருக்கிறேன் எனினும் வலைச்சரம் தொடுக்க வாசிக்கும் அனுபவம் போதும் என்ற எண்ணத்தில் இசைகிறேன் என்றேன்.

வலைச்சரத்தில் வந்த இடுகைகளை வாசித்தால் பல பதிவர்கள் பெயர் திரும்பத் திரும்ப வந்திருப்பதைக் காணலாம். என் இடுகைகளிலும் அதனைத் தடுக்க இயலாது என்றே எண்ணுகிறேன். நனவிடைத் தோய்தல் எல்லோருக்கும் வழக்கமான ஒன்றுதானே ? எனினும் என்னால் இயன்றவரை நல்மணம் வீசும் மாலையாகத் தொடுக்க முயற்சி செய்கிறேன். வாய்ப்பளித்த பொன்ஸ்~பூர்ணா அவர்களுக்கும் ஆலோசனைகள் அளித்த முத்துலெட்சுமி அவர்களுக்கும் இடுகைகளை வாசிக்க வருகை தரும் உங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த இடுகையில் மறுபடியும் சந்திப்போம். :-)